வருடத்திற்கு ஒருமுறையாவது நம் தினசரி, இயந்திர வாழ்விலிருந்து சற்று விலகி, இயற்கையின் ரம்மியமான சூழலை அனுபவித்து உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வை பெற நம் எல்லோருக்கும் விருப்பமே! நீங்கள் ஒரு பயண ஆர்வலர் என்றால் மலைகள், பள்ளத்தாக்குகள், பீடபூமிகள், ஏரிகள், புல்வெளிகள் போன்றவைகளை காணும் பொழுது கண்டிப்பாக உல்லாசப்படுவீர்கள். உங்கள் அடுத்த பயண இலக்கை இன்னும் தேர்வு செய்யவில்லை என்றால், இதோ உங்களுக்கான அற்புதமான, இதுவரை நீங்கள் கண்டறியாத 5 இடங்கள்:
1.பதான், குஜராத்
சுவாரஸ்யமான கட்டிடங்கள், கோவில்கள், அழகான ஏரிகள் நிறைந்த ஒரு அழகான இடம் பதான். அதன் வரலாற்றை நோக்கினால், பதான் கி.பி 745 வருடத்தில் சத்வா மன்னர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் பதான் இடம் பிடித்துள்ளது. பதான் புடவைகள் உலகளவில் புகழ் பெற்றவை. ‘பதான் ராணி கா வாவ்’ என்ற மிக நுணுக்கமான வேலைபாடுகள் நிறைந்த படி கிணறும், பதானின் அழகும் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
2.மஜுலி, அஸ்ஸாம்
மஜுலி, அஸ்ஸாமில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் கரைகளில் அமைந்துள்ள ஒரு அழகு தீவு. மாவட்டமாக மாற்றப்பட்ட முதல் தீவு என்ற பெருமை மஜுலிக்கு 2016ஆம் ஆண்டு ஏற்பட்டது. ஜோர்ஹத்திலிருந்து 2௦கிலோமீட்டர் தொலைவில் இருக்கும், உங்கள் மனதை மயக்கும் அழகு, எளிமை, அமைதி நிறைந்த, நீங்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய இந்த தீவிற்கு படகில் செல்ல வேண்டும்.
உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு மஜுலி. கலாச்சார சுவர்க்கம் என்று அழைக்கப்படுகிற மஜுலி பலதரப்பட்ட பழங்குடி மக்கள் வாழுமிடமாகும். மஜுலியின் ஜொலிக்கும் அழகை ரசிக்க வேண்டுமென்றால், பருவமழைக்காலமே மிக உகந்தது.
3.ஹஜ்ஜியர், இமாச்சலப்பிரதேசம்
நகர்ப்புற வாழ்க்கையின் நெருக்கடியிலிருந்து தப்பித்து, மலைப்பகுதி காட்சிகளை ஒதுங்கி ரசிக்க விரும்புபவர் நீங்களென்றால், ஹஜ்ஜியர் உங்களுக்கான இடமாகும். மலையேற்றம், நடைப்பயிற்சி, பாராகிளைடிங், குதிரைச்சவாரி போன்ற பலதரப்பட்ட நடவடிக்கைகளில் உங்களை இங்கு ஈடுப்படுத்திக் கொள்ளலாம். இவ்விடத்தின் மலைகள், ஏரிகள், புல்வெளிகளின் கண்கவர் அழகில் மயங்கிய உங்களுக்கு, இங்கிருந்து செல்ல மனதே வராது. குளிகாலத்தில் ஹஜ்ஜியர் முழுவதும் பனி சூழ்ந்திருப்பதால், கோடை காலமே இங்கு வருவதற்கேற்ற காலமாகும்.
4.டிர்தான் / சிராஜ் பள்ளத்தாக்கு, இமாச்சலப்பிரதேசம்
இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள இந்த வனப்பான பள்ளத்தாக்கு, பெரும்பானவர்களுக்கு இன்னும் அறியாத ஒரு இடமாகும். மிக அழகான காட்சிகளும், பல நடவடிக்கைகளும் இவ்விடத்தின் பிரபலத்தை அதிகரித்து வருகிறது. இந்த டிர்தான் / சிராஜ் பள்ளத்தாக்கில் மீன் பிடித்தல், மலை ஏறுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம். அல்லது இப்பள்ளத்தாக்கின் ரம்மியமான அழகை மட்டும் ரசித்துக்கொண்டிருந்தாலே போதுமானது. அதன் அழகை மட்டுமே ரசிக்க வரும் பயணிகளும் உண்டு. தங்குவதற்கான காட்டேஜ்களும், நல்ல உணவுடன் கூடிய ரெஸ்டாரன்ட்களும் இங்கு வரும் சுற்றுலாபயணிகளுக்காக வரத்தொடங்கியுள்ளன.
5.ஒகேனக்கல், தமிழ்நாடு
நீர்வீழிச்சியில் நாட்டம் உள்ளவர்களுக்கான சரியான தேர்வு, தமிழ்நாட்டிலுள்ள ஒகேனக்கல். காவேரி ஆறு இங்கு சிறு நீர்வீழ்ச்சியாக பிரிந்து உருவான இடம் ஒகேனக்கல் ஆகும். இதை இந்தியாவின் நயாகரா என்றும் சொல்லலாம். சென்னை, பெங்களூரு போன்ற பெரும் நகரங்களின் அருகில் அமைந்துள்ள, தருமபுரி மாவட்டத்திலுள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை காண வருடம் முழுவதும் சுற்றுளா பயணிகள் குவிகின்றனர்.

