நம் உடலில் மிக அதிகமாக உபயோகிக்கப்படும் உறுப்பு கை ஆகும். காலை முதல் இரவு வரை தொடர்ந்து எதோ ஒரு வேலையை நம் கைகளுக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறோம். பெரும்பாலான பெண்கள் தங்கள் முக அழகின் மீது அக்கறைக் கொண்டு முகம் மற்றும் சரும அழகிற்கான வழி முறைகளை தவறாமல் பின்பற்றுகின்றனர். அழகான முகம் உங்களை அழகாக காட்டும். ஆனால் அழகான கைகளும் இருந்தால் உங்கள் வசீகரம் இன்னும் அதிகரிக்கும்.
உங்கள் கைகளின் மீது கவனம் செலுத்த நீங்கள் அழகு நிலையங்களுக்கு சென்று பணம் செலவழித்து மானிக்யூர் செய்யவேண்டும் என்னும் அவசியம் இல்லை. அதை வீட்டில் நீங்களே செய்துக் கொள்ளலாம். முறையான மானிக்யூர் மூலம் நம் கைகளில் சீரான இரத்த ஓட்டத்தை பெற்று, இறந்த தோல் செல்களை நம் கைகளிலிருந்து அகற்றவும் முடிகிறது. அதன் மூலம் கைகளின் நிறத்திற்கு மெருகூட்டி , மென்மையான, மிருதுவான, புத்துணர்ச்சி மிக்க கைகளை பெறலாம்.
சுலபமாக வீட்டிலேயே மானிக்யூர் செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்:
மானிக்யூர் செய்ய தேவையான பொருட்கள்:
- ஒரு அகலமான சிறு தொட்டியில் இளஞ்சூட்டில் சோப் தண்ணீர்.
- ஒரு பஞ்சு உருண்டை அல்லது காதில் அழுக்கெடுக்க பயன்படும் இயர்-பட்.
- நகப்பூச்சு அழிப்பான் (நெயில் பாலிஷ் ரிமூவர்).
- ஸ்க்ரப்பர் க்ரீம்.
- நக பிரஷ்.
- மாயிஸ்ட்ரைசர்.
- நகம் வெட்டும் கருவி.
- நகத்தை வடிவமைக்கும் கருவி (நைல் ஃபைல்).
- நகத்தின் பக்கவாட்டில் உள்ள மேல் தோல் அகற்றும் கருவி (க்யூடிகில் ரிமூவர்).
- பேஸ் கோட்.
- நகப்பூச்சு உங்கள்ளுக்கு விருப்பமான நிறத்தில்.
- நக பஃப்பர் (விருப்பபட்டால்).
மானிக்யூர் எப்படி செய்வது?
1.நக பூச்சை களையவும்
முதலில் உங்கள் நகங்களில் ஏற்கனேவே போடப் பட்டிருக்கும் நக பூச்சை, நக பூச்சு ரிமூவர் கொண்டு அகற்றவும். நீங்கள் உபயோகிக்கும் நக பாலிஷ் ரிமூவர் நல்ல தரமானதாக உபயோகிக்கவும். ஏனெனில் அதில் உள்ள அசிடோன் நகங்களையும், அதை சுற்றியுள்ள பகுதிகளையும் வறட்சியாக்கி விடும்.
2.இளஞ்சூட்டு நீரில் உங்கள் கைகளை அமிழ்த்தவும்
மிதமான ஷாம்பூவை , வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். அதில் உங்கள் கைகளை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். தரமான நக பிரஷ் கொண்டு நகங்களை சுத்தம் செய்யவும். மேலும் நன்கு சுத்தம் செய்ய , இளஞ்சூட்டு நீரில் உப்புடன் ஷாம்பூவைக் கலந்து கைகளை தேய்த்து கழுவவும்.
3.நகங்களுக்கு பக்கவாட்டில் உள்ள அதிகப்படியான கடின தோல்களை (க்யூட்டிகில்) வெட்டி நீக்குங்கள்
கைகளை நன்கு காய வைத்தப் பிறகு கைகளிலும், நகங்களிலும் க்யூட்டிகில் க்ரீம் தடவவும். அதை ஒரு போதும் நைல் கட்டர் கொண்டு வெட்டக் கூடாது. அதற்கென பிரத்யேகமாக உள்ள க்யூட்டிகில் அகற்றும் சிறு கருவி கொண்டு அகற்றவும். இதை கவனமுடன் செய்யவில்லை என்றால், நகத்தின் வெளி தோல் பாதிப்படையும்.
4.நகங்களை வெட்டி, தேய்த்து சீராக்கவும்
இப்பொழுது உங்கள் கவனம் நகங்களின் மீது இருக்கட்டும். நகக்கண்கள் பாதிப்படையாவண்ணம் நகங்களை வெட்டவும். வெட்டிய பிறகு, நகத்தின் வெள்ளை பகுதி தெரியும்படி இருக்கவும்.
நகங்களின் முனைகளை லேசாக வெட்டிய பின், அதை நன்கு தேய்த்து அழகாக, மென்மையாக்கவும் .உங்கள் நகங்களின் வடிவம் உங்கள் விரல்களின் வடிவத்தை ஒத்து இருக்கவேண்டும் என்பது மிக அவசியம்.
5.ஸ்க்ரப் / தேய்க்கவும்
மென்மையான ஸ்க்ரப் கொண்டு மிருதுவாக கைகளை தேய்த்து மசாஜ் செய்யவும். இதன் மூலம் கைகளின் இறந்த தோல் செல்களை அகற்ற முடியும். இதனால் அழகான , பளபளப்பான கைகளை பெறலாம்.
6.க்ரீம் உபயோகித்து கைகளை மசாஜ் செய்யவும்
கைகளை ஸ்க்ரப் செய்த பிறகு, கைகளை கழுவி சுத்தமான துணியால் ஈரம் போக துடைக்கவும். மேற்கூறிய எல்லாவற்றையும் செய்த பிறகு , உங்கள் கைகள் மாசில்லாமல் , மிருதுவாக இருப்பதை காண முடியும். இதன் பிறகு தரமான கைகளுக்கான பிரத்யேகமான க்ரீமை கொண்டு 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் செய்வதன் மூலம், க்ரீம் உங்கள் கைகளுக்குள் ஊடுருவி சென்று, தோலுக்கு ஊட்டமளிகிறது. நம் கைகளின் தோலை மிருதுவாக்குவதோடு மட்டுமில்லாமல், இரத்த ஓட்டத்தை அதிகரித்து கைகளை மிக அழகாக்குகிறது.
7.நகப் பூச்சு / நைல் பாலிஷ் போடவும்
கைகளை இன்னும் வசீகிரமாக்க , நாம் செய்துக்கொண்ட மானிக்யூரை பாதுகாக்க, நகங்களின் மீது நகப் பூச்சு தடவவும். முதலில் பேஸ் கோட் போட வேண்டும். அது காய்ந்த பிறகு, இரு அடுக்குகள் (லேயர்ஸ்) நகப்பூச்சு போடவும். பின் இறுதி ஒப்பனை கொடுக்கவும். அவ்வாறு செய்யும் பொழுது, நகங்களுக்கு வெளியில் நகப்பூச்சு போயிருந்தால், நகப் பூச்சு ரிமூவரில் முக்கிய இயர்- பட் கொண்டு துடைத்து எடுத்து விடுங்கள். ஒருவேளை நகப்பூச்சு போடுவதில் விருப்பமில்லை என்றால், நகங்களுக்கான பப்ஃபர் கொண்டு நகங்களை பப்ஃபர் செய்யவும். அதன் பிறகு நகப்பூச்சு போட தேவையில்லை.
மேலே கூறிய முறைகளை பின் பற்றி, ஓய்வான வேளையில் மானிக்யூர் செய்து அழகான கைகளை பெற்று அனைவரது பாராட்டுகளையும் பெறுங்கள்.

