அதிக மாதவிடாய் வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அசாதாரண முடி வளர்ச்சி போன்றவற்றை எதிர்கொள்ளும் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நீர்கட்டிகளை பற்றிய விழிப்புணர்வு இல்லாமலோ அல்லது தங்கள் பிரச்னைகளுக்கான தீர்வை தேடி அலைந்துக் கொண்டோ இருப்பார்கள். இந்த விஷயத்துடன் சம்பந்தப்பட்டவரா நீங்கள்? நீங்கள் முதலில் அதற்கான அறிகுறிகள் என்ன என்று தெரிந்துக்கொண்டு, தொடக்கத்திலேயே தேவையான நடவடிக்கைகளை எடுத்தால் ஆரோக்யமான இனப்பெருக்க அமைப்பை பெறலாம்.
நீர்க்கட்டிக்கான பொதுவான சில அறிகுறிகள் இதோ:
1.அசாதாரண முடி வளர்ச்சி
தாடை, உதடு இவற்றின் மேல் முடி வளர்வதும், முகத்தில் சிறு பருக்கள், எரிச்சல் தன்மை உண்டாவதும் மிக சாதரணமாக இருந்தாலும் இவற்றிற்கான காரணத்தை கண்டறிதல் வேண்டும். ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளால் உடலில் உள்ள ஆண்களுக்கான ஹார்மோன்களை தூண்டி விட்டு அசாதாரண முடி வளர்ச்சியை உண்டாக்கும். இது நீர்கட்டிக்கான ஒரு அறிகுறியாகும்.
2.மனஅழுத்தம் / மன சோர்வு
மனசோர்விற்கு ஒருவர் வாழ்வில் எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், அதற்கு நீர்கட்டியும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். திடீரென்று மனசோர்வு அல்லது எதிலும் நாட்டமின்மை உண்டாகலாம். ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் நீர்கட்டிகளால் மன நோய்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், உடனடி தீர்வு காண வேண்டும்.
3.ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி
இது ஒரு முக்கியமான அறிகுறி. ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மாதவிடாய் வராமல் இருப்பதால் நீங்கள் அதை நிவாரணம் என்று நினைத்தால் தவறு. அது உங்களை இன்னும் பெரிய பிரச்னைக்கு கொண்டு செல்லும். நீண்ட இடைவெளிக்கு பின் வரும் மாதவிடாயின் பொழுது அதிக வலி ஏற்பட்டால், அது கண்டிப்பாக நீர்க்கட்டியின் அறிகுறியாகும்.
4.உயர் இரத்தழுத்தம்
உயர் இரத்தழுத்தம் சிலசமயங்களில் உயிரையே பறிக்கும் மாரடைப்பிற்கு வழி வகுக்கும் என்பதால் மிகவும் ஆபத்தானது. இரத்தழுத்தம் கூடினால் நீர்க்கட்டிக்கான அறிகுறியா என்று சோதனை செய்து பார்த்து விடவேண்டும். குறைபாடுள்ள சினைப்பை (ஓவரி), கனைய சுரப்பு நீரின் (இன்சுலின்) அதிகரிப்பு இவற்றால் ரத்தக்குழாய்களுக்கு செலுத்தப்படும் இரத்தத்தின் அழுத்தம் அதிகரித்து உயர் இரத்தழுத்தம் ஏற்படலாம்.
5.முடி கொட்டுதல்
இது பெண்களுக்கு உண்டாகும் பொது பிரச்சினை. ஒரு நாளில் 60-100 முடி இழைகள் கொட்டுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் மிக அதிகமான இழப்பு ஏற்பட்டால் அது எதற்கான அறிகுறி என்பதை கண்டறிய வேண்டும். அதிகப்பட்சமான டெஸ்டோஸ்டிரோன் உடலில் இருந்தால் வழுக்கை ஏற்படலாம். இது நீர்க்கட்டிக்கான மற்றொரு பொதுவான அறிகுறியாகும்.

