நம் தினசரி வாழ்க்கையில் கண்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. கண்களை மிகவும் உபயோகிப்பதால் கிட்டப்பார்வை, கண்புரை, பசும்படலம் என கூறப்படும் கிளாகோமா, தூரப்பார்வை போன்ற கண் நோய்கள் உண்டாகின்றன. உங்கள் உடம்பின் உள்ள மற்ற தசைகளுக்கு எப்படி ஓய்வு தேவைபடுகிறதோ அதே போல கண் தசைகளுக்கும் ஓய்வு தேவை. அதிக நேரம் வேலைப்பார்த்த உங்கள் கண்களுக்கு பயிற்சிகள் சற்றே புத்துணர்ச்சி கொடுத்தாலும், உங்கள் கண் நோய்களிலிருந்து முழுமையான விடுதலை கிடைக்கும் என உறுதியாக கூற முடியாது.
இந்த பயிற்சிகளை முறையாக செய்வதன் மூலம் கண் உறுத்தல், வீக்கம் இவை வராமல் தடுக்கலாம். மேலும் உங்கள் கண் விழித்திரை பாதிப்படையாமல் பாதுகாக்கவும் இப் பயிற்சிகள் உதவுகின்றன. உங்கள் பரபரப்பான வேலைகளுக்கு நடுவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்து பயன் பெறவும்.
1.கண்களுக்கான உள்ளங்கை மசாஜ்
உங்கள் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடொன்று சில நொடிகள் தேய்த்து, நீங்கள் கைகளில் சூட்டை உணரும் பொழுது உங்கள் உள்ளங்கைகளை, மூடிய கண்களின் மேல் அழுத்தாமல் வைக்கவும். சில நொடிகள் உங்கள் கண்கள் அந்த சூடை உணரட்டும். இதை 2-3 முறைகள் கைகளை தேய்த்து தொடரவும். உங்கள் கைகளின் சூடு, கண் தசைகளுக்கு புத்துணர்ச்சியை தரும்.
2.கண்களை சுழற்றுதல்
கண்களை சுழற்றுவதால் உங்கள் விழித்திரையின் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் இதில் ஏதாவது ஒன்று அல்லது அனைத்தையும் தினசரி பின்பற்றலாம்.
- மேலும் கீழும்: மேலே உத்திரத்தை பார்த்தவாறு 5 நொடிகள் காத்திருக்கவும். பின் அதேபோல் கீழே தரையை பார்த்தவாறு 10 நொடிகள் காத்திருக்கவும். இதை 3-4 முறைகள் செய்யவும்.
- வலது மற்றும் இடது புறம் : உங்களின் வலது புறம் கண் விழிகளை 5 நொடிகள் மற்றும் இட புறம் 5 நொடிகள் தலையை திருப்பாமல் பார்க்கவும் . இதை 3-4 முறைகள் செய்யவும்.
- சுழற்றுதல்: உங்கள் தலை மற்றும் உடலை நேராக, நிமிர்த்தி வைத்துக் கொண்டு, உட்கார்ந்தோ அல்லது நின்று கொண்டோ உங்களின் வலப்புறம் மேலும், இடப்புறம் கீழே தரையையும் வேகமாக பார்க்கவும். இதை 10-15 முறைகள் செய்யவும்.
- கண்களை இறுக்கமாக மூடி அகல திறக்கவும்: உங்கள் கண்களை மூடிக் கொண்டு இறுக்கமாக 5 நொடிகள் மூடி இருந்துவிட்டு கண்களை திறக்கவும்.அதே போல் கண்களை அகலமாக, விரித்து 5 நொடிகள் திறந்து வைத்துக் கொண்டு சாதாரண நிலைக்கு வரவும். இதை 3-4 முறைகள் செய்யவும்.
- மேல்நோக்கி வலது மற்றும் இடது புறம்: மேல்புறம் வலது மூலை 5 நொடிகளும், பின் இடது மூலையில் 5 நொடிகளும் பார்க்கவும். அதேபோல் கீழ் புறம் வலது மூலை, இடது மூலை முறையே 5 நொடிகள் பார்க்கவும். இதை 10-15 முறைகள் செய்யவும்.
3.துரிதமாக இமைக்கவும்
நன்கு வசதியாக அமர்ந்துக் கொண்டு வேகமாக உங்கள் கண்களை 10-15 முறைகள் இமைக்கவும். பின் 20 நொடிகள் கண்களை மூடி கொண்டு ஓய்வு எடுக்கவும். இதை நான்கு முறை செய்யவும்.
4.அருகில், தொலைவில் கொண்டு செல்வது
இப்பயிற்சி உங்கள் பார்வை மற்றும் கவனத்தை அதிகரிக்கும். ஓர் இடத்தில் வசதியாக அமர்ந்துக் கொண்டு உங்கள் கைகளை நீட்டி, கட்டை விரல்களை தம்ஸ்அப் செய்வது போல் உயர்த்தவும். இப்பொழுது உங்களின் உயர்த்திய கட்டை விரல்களை மெதுவாக உங்கள் அருகில் கொண்டு வரவும். பின் மெதுவாக மீண்டும் அதே போல் கைகளை நீட்டவும். பின் கைகளை நீட்டியபடி உங்கள் கட்டை விரல்களை மெதுவாக நடுவிலிருந்து இட புறத்திற்கும், வலப்புறத்திற்கும் கொண்டு செல்லவும். உங்கள் கண்களை நகரும் கட்டை விரல்களை நோக்கியவாறு சுழற்றவும். இது உங்கள் விழித் திரையை பலப் படுத்த உதவுகிறது.
5.கண்களால் எட்டு போடவும்
மற்றொரு பயனுள்ள கண்களுக்கான பயிற்சி இது. ஒரு வெற்றிடத்தை உற்று நோக்கியவாறு கண்களால் எட்டு போடவும். 20 நொடிகளுக்கு தொடர்ந்து இப்பயிற்சியை செய்யவும். பின் எதிர் திசையில் இப்பயிற்சியை செய்யவும்.
6.சூரிய வெளிச்சம்
சூரிய ஒளி சிகிச்சை முறையின் வெற்றி பற்றி ஆராய்ச்சிகள் ஒன்றும் நிரூபிக்கபடவில்லை என்றாலும், இதை பின் பற்றியவர்கள் இது மிக எளிமையான, கண் பார்வையை மேம்படுத்தும் ஒரு சிகிச்சை முறை என்று கூறுகிறார்கள். காலை சற்று சீக்கிரமாக எழும்பி, சூரியன் உதிக்கும் திசையை நோக்கி வசதியாக அமரவும். சில நொடிகள் சூரிய ஒளியை கண்கொட்டாமல் பார்க்கவும். ஒளியின் வெளிச்சம் கூடுதலாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் சில நொடிகள் அதிலிருந்து உங்கள் பார்வையை சற்றே விலக்கி அல்லது, தலையை வேறு புறமாக சுழற்றவும். இப்பயிற்சியை காலை 9 மணிக்கு முன் அல்லது மாலை 5 மணிக்கு பின் செய்யவும். ஏனெனில் இடைப்பட்ட நேரத்தில் கண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் புற ஊதா கதிர் வீச்சு அதிகமாக இருக்கும்.
இப்பயிற்சிகள் உங்கள் விழித்திரையின் ஆரோக்யத்தை அதிகரித்து, விழியன் வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. இவை உங்கள் மூளைக்கும் மிக நல்லது.

