பிறப்புறுப்பின் ஆரோக்கியம் : உங்கள் பிறப்புறுப்பை ஆரோக்யமாக பராமரிப்பது எப்படி?

Spread the love

உங்களுக்கு பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது பற்றி எல்லாம் தெரியும் என்று நீங்கள் நினைத்து இருக்கலாம். ஆனால் அது தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. தண்ணீர் அல்லது கிருமிநாசினி கலந்த தண்ணீர் விட்டு நன்கு கழுவுவது மூலம் அந்த இடத்தில் சேர்ந்து இருக்கும் பாக்டீரியாவை அழித்து விடலாம் என்று நீங்கள் நினைக்க கூடும். இன்னும் சில முக்கியமான விவரங்கள் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது உள்ளது. மருத்துவர்களின் கூற்றுப்படி, ஒரு நாளில், ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளைபடுதல் சாதாரணம் தான். அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அனால் உங்கள் பிறப்புறுப்பில் நாற்றமோ, வேறு நிறத்தில் கசிவோ, வெளியேற்றமோ இருந்தால், நீங்கள் அதை கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.

 

1.PH அளவை பராமரிக்க வேண்டும்

பொதுவாக பிறுப்புறுப்பின் ஆரோக்ய PH சமநிலை ஏறத்தாழ 4.5 ஆகும். இது இயற்கையாகவே அந்த இடத்தில் ஏற்படும் தொற்றுகளை, நல்ல பாக்டீரியா மூலம் எதிர்க்கிறது. அந்த இடத்தை அடிக்கடி கழுவுவது இந்த செயல்பாட்டிற்கு இடையூறு விளைவித்து, பிறப்புறுப்பின் பாதையில் தொற்றுக்கள் குடியேற வழி வகுக்கிறது. கடினமான சோப் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது PH அளவை குறைக்க கூடும்.

 

2.உங்கள் உடல் வாகிற்கு ஏற்ப  தகுந்த உடைகளை தேர்ந்தெடுங்கள்

கெட்ட பாக்டீரியாவிலிருந்து உங்கள் பிறப்புறுப்பை பாதுகாக்க, சரியான, தகுந்த உடைகளை அணிவதும் மிக முக்கியம். இறுக்கமான காலாடைகள் மற்றும் உள்ளாடை அந்த இடத்தை ஈரமாக்கி அங்கு ஈஸ்ட் தங்க வழி வகுக்கிறது. அது பிறப்புறப்பை பாதிக்கிறது. அதனால் வசதியான, சற்று தளர்வான உள்ளாடைகளை அணியுங்கள். மேலும் நீச்சலடித்தவுடன் அல்லது தினசரி வேலைகள் முடிந்த பிறகு உள்ளாடைகளை மாற்றுவது நல்லது.

 

3.முறையான பயிற்சிகள்

ஆரோக்யமான பிறப்புறுப்பை பராமரிக்க கெகல் எனப்படும் பெல்விக் தசை பயிற்சியை முறையாக செய்ய வேண்டும். இந்த பயிற்சி பெல்விக் அதாவது கீழ் இடுப்பு பகுதியில் உள்ள தசைகளை இறுக்கி பிறப்புறுப்பு, ஆசனவாய், சிறுநீர்ப்பை ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது. இதை பற்றி மேலும் தெளிவாக புரிந்துக் கொள்ள  வேண்டுமென்றால் பெல்விக் உடற்பயிற்சி நிபுணரை அணுகவும். அந்த மாதிரி பயிற்சிகள் பேறுகால சமயத்தில் சுலபமான பயிற்சிக்கு வழி வகுக்கும். சிறுநீர் கசிவதையும் தடுக்கும்.

 

4.ஆரோக்ய உணவை உண்ணவும்

சமநிலையான ஆரோக்ய உணவை உண்பதன் மூலம், பலவிதமான தொற்றுகளிளிருந்து உங்கள் பிறப்புறுப்பை பாதுகாத்துக் கொள்ளலாம். பகல் நேரத்தில் நிறைய திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளவும். அது ஆரோக்ய பிறப்புறுப்பிற்கு வழி வகுத்து, இனப்பெருக்கத்திற்கும் உதவுகிறது. புரோபயாடிக் தயிர் அல்லது யோகர்ட், குறிப்பாக கிரேக்க தயிர் என்று சொல்லப்படும் வடிக்கட்டிய தயிர் போன்றவற்றில் லேக்டோபேசில்லஸ் நிறைந்து இருப்பதால் உங்கள் பிறப்புறுப்பை வலுவாக்குகிறது. அவோகாடோ, ஸ்ட்ராபெரி, முட்டை, சால்மன் மீன், காலே போன்ற உணவுகளும் ஆரோக்யத்தை அதிகரிக்கும்.

 

5.நல்ல சுகாதாரத்தை பின்பற்றவும்

எப்பொழுதும் நல்ல சுகாதாரத்தை பின்பற்றுவது மிக முக்கியம். ஒவ்வொரு முறை மலம் கழித்த பிறகு, முன் பக்கத்திலிருந்து பின்பக்கம் வரை நன்கு துடைக்கவும். மாதவிடாய் சமயத்தில் உபயோகிக்கும் சானிடரி நாப்கின்களை அடிக்கடி மாற்றினால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம். வெள்ளைப்படுதல் இருக்கும் சமயம் அடிக்கடி உங்கள் உள்ளாடைகளை மாற்றுவது முக்கியமாதலால், அந்த மாதிரி நேரங்களில் எப்பொழுதும் இரண்டு அல்லது மூன்று உள்ளாடைகளை வைத்து இருக்கவும். இல்லையென்றால் எரிச்சல் மற்றும் நமைச்சல் உண்டாக வாய்ப்புண்டு.

 

Image source: pixabay, pexels, wikipedia commons, maxpixel

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன