கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூட்டுவலி மற்றும் வீக்கத்தினால் அதிகம் அவதிப்படுவார்கள். குறிப்பிட்ட சில உணவுகள், கீல்வாதம் சம்பந்தப்பட்ட வலிகளையும், வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது. கீல்வாதம் பாதிக்கப்பட்டவர்களில், இருபத்து நான்கு சதவிகிதம் பேர்கள், தாங்கள் உட்கொண்ட சில மருத்துவ குணமுள்ள உணவுகள் நேரடியாக மூட்டு வீக்கம் மற்றும் வலிகளைக் குறைப்பதாக சொல்கிறார்கள் என, சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சில உணவுகளில் உள்ள வீரியமிக்க சத்துக்கள் இந்த மூட்டுவீக்கத்தை கட்டுப்படுத்த வல்லவை.
மூட்டுவீக்க வலிக்கு நிவாரணம் தரும் ஐந்து வகை உணவுகளை இங்கே பாருங்கள்:
1.வாதுமைக்கொட்டை எனப்படும் வால்நட்ஸ்:
வாதுமைக்கொட்டையில் ஊட்டச்சத்துக்களும், ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலங்களும் நிறைந்திருப்பதால், மூட்டுக்கள் சம்பந்தப்பட்ட வீக்கங்களை குறைக்க பெரிதும் உதவுகிறது. ஆலிவ் ஆயில் உபயோகிப்பவர்களை விட, ஏ எல் ஏ வகை ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ள வாதுமைக்கொட்டைகளை உண்பவர்களுக்கு மூட்டுவலியிலிருந்து விரைவில் நிவாரணம் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.
2.பசலைக்கீரை:
பசலைக்கீரையில் வைட்டமின்களும், எதிர் ஆக்ஸிகரணிகள் அதிகமாக உள்ளதால், கீல்வாதத்தால் ஏர்படும் மூட்டுவலி மற்றும் வீக்கத்தை வெகுவாக்க் குறைக்கிறது. இதிலுள்ள “கெம்ஃபரோல்” எனப்படும் எதிர் ஆக்ஸிகரணி முடக்குவாதம் சம்பந்தப்பட்ட மூட்டுவீக்கத்தைக் குறைக்கிறது.
3.பூண்டு:
“டயாலில் டிசுல்ஃபைட்” என்னும் அரிய வகை வேதிப்பொருள் உள்ள பூண்டு, கீல்வாதம் உட்பட பல நோய்களுக்கு அரிய மருந்தாக அமைந்துள்ளது. குறுத்தெலும்புகளைப் பாதிக்கும் நொதிகளை (என்சைம்ஸ்) வளரவிடாமல் தடுக்கும் சக்தி பூண்டில் உள்ள இந்த “டயாலில் டிசுல்ஃபைட்” என்ற வேதிப்பொருளுக்கு உள்ளது. இதில் வீக்கத்தை குறைக்கும் மூலப் பொருட்களும் உள்ளதால், கீல்வாத்திற்கு மிக ஏற்ற உணவாக கருதப்படுகிறது
4.ப்ரக்கோலி எனப்படும் பச்சைப்பூ கோஸ்:
முட்டைகோஸ் வகையான பச்சைப்பூ கோஸில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளதென்பதை நாம் அறிவோம். இதிலுள்ள “சல்ஃபோராஃபேன்” எனப்படும் அறிய வேதிப்பொருள் மூட்டுவீக்கத்தை உருவாக்கும் அணுக்களை அழிக்க வல்லதாக இருப்பதால், மூட்டுவீக்கத்தை குறைத்துவிடுகிறது.
5.கொழுத்த மீன்:
மாக்கெரல், ட்ரௌட், சல்மோன் போன்றகொழுப்பு மீன் வகைகளில், ஒமெகா 3 கொழுப்பு அமிலம் மிகுதியாகச் சுரப்பதால், உடல் உறுப்புகளின் வீக்கத்தை குறைக்க வெகுவாக உதவுகிறது. முடக்கு வாத மூட்டு வீக்கத்தினால் அவதிப்டும் நோயாளிகள் மட்டுமல்ல, காலையில் எழுந்தவுடன் இருக்கும் தசைப்பிடிப்பு, மற்றும் பல்வேறு இணை மூட்டு வலிகளையும் கொழுப்பு மீன் குறைக்கிறது. ஒமேகா 3 வகை கொழுப்பு அமிலங்கள் மூட்டு முடக்குவாதத்தை குறைக்க வல்லவை என பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மீன்களில் அதிகமாக உள்ள வைட்டமின் டீ உடலிலுள்ள பல குறைபாடுகளை நீக்கு கிறது. முடக்குவாத மூட்டுவீக்கத்திற்கு, வைட்டமின் டீ குறைபாடே காரணம் என பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மூலப்படம் ஃபிக்ஸாபே யிலிருந்து எடுக்கப்பட்டது

