வேலை பளு, மன அழுத்தம் இரண்டும் நிறைந்த இந்த காலத்தில், சிலருக்கு ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சினை இந்த ஒற்றை தலைவலியாகும். மைக்ரைன் என்னும் இந்த ஒற்றை தலை வலி, சுற்று சூழல் காரணங்களால், அல்லது மரபியல் காரணங்களால் கடுமையான தலை வலியாக தூண்டப் படுகிறது. இந்த மைக்ரைன் தலைவலி பெரும்பாலும் தலையின் ஒரு பகுதியில் ஏற்படும். வலி என்பதை விட ஒரு வித துடிப்பு போல் ஏற்பட்டு வெகு நேரத்திற்கு நீடிக்கும். இந்த தலை வலி திடீரென்று ஏற்படும் பொழுது நீங்கள் ஏதாவது வேலையில் ஈடுபட்டிருந்தால் அது உங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும். அலுவலகங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகளுக்கு இந்த தலை வலி மிக்க சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஆரம்பக் கால கட்டத்தில் இந்த மைக்ரைனை கண்டுபிடித்து விட்டால் சாத்தியமான சிகிச்சை அளித்து வலியை குறைக்க வழி செய்யலாம்.
ஒற்றை தலை வலிக்கான அறிகுறிகள்
இந்த தலைவலிக்கான தடுப்பு நடவடிக்கைப் பற்றி நாம் பார்க்கும் முன், அதற்கான அடிப்படை அறிகுறிகளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். இதற்கான அறிகுறிகள், இந்த தலை வலி தொடங்குவதற்கு சற்று முன்னரே வெளிப்பட தொடங்கிவிடும்.
எல்லா மைக்ரைனும் ஒரே மாதிரியான வலியை தரும் என்று சொல்ல முடியாவிட்டாலும், மைக்ரைன் தலைவலிக்கான சில பொதுவான அறிகுறிகள் பற்றி பார்ப்போம்:
- மிதமான முதல் தீவிர தலை வலி உங்கள் தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் ஏற்படும்.
- ஏதாவது வேலை செய்யும் பொழுது தலை வலி அதிகரிக்கும்.
- தலை வலி இருக்கும் பொழுது சத்தம் மற்றும் வாசனை உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.
- சோம்பல், அசதி, வாந்தி எடுக்க வேண்டும் என்ற உணர்வு, அன்றாட வேலைகளை செய்வதில் ஆர்வமின்மை போன்றவை ஏற்படும். சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்தால் மட்டுமே சற்று நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு, வயிற்று வலி, வயிற்று போக்கு, உடல் வெப்ப நிலையில் திடீர் மாற்றம், அதிக வியர்வை போன்ற அறிகுறிகளும் ஏற்படுவதுண்டு.
ஒற்றை தலை வலி / மைக்ரைன் ஏற்பட காரணங்கள்:
மருத்துவர்கள் இந்த தலைவலி உண்டாவதற்கான பல காரணங்களை அறியவில்லை என்றாலும் பொதுவாக மரபியல் மற்றும் உணவு பழக்க வழக்கங்களே காரணம் என்று கூறுகின்றனர்.
உணவு பழக்க வழக்க காரணங்கள்:
சில பதப்படுத்தப்பட்ட உணவுகளான பாலாடைக்கட்டி, மது, நைட்ரேட் போன்ற சேர்க்கைகள் மைக்ரைன் தலை வலியை தூண்டக் கூடியவை. 30 சதவிகித மைக்ரைன் தலைவலிக்கு மோனோசோடியம் குளூட்டமேட் உள்ள உணவை உண்ணுதலே காரணமாகும்.
ஆரோக்ய மற்றும் சுற்றுப்புற காரணங்கள்:
சோர்வு, மற்றும் தூங்கும் பழக்கத்தில் மாற்றங்கள் மைக்ரைன் உண்டாக வழி வகுக்கும். வானிலையில் திடீர் மாற்றம், சாப்பிடாமல் பட்டினி இருப்பது போன்றவையும் மைக்ரைன் தலை வலிக்கு காரணங்கள் ஆகும்.
உளவியல் காரணங்கள்:
சோர்வு, களைப்பு, மன அழுத்தம், பசி போன்றவை மைக்ரைன் தலைவலியை தூண்டக் கூடியவை. கிட்டத்தட்ட 50 முதல் 80% மக்களுக்கு உளவியல் அழுத்தம் தான் இந்த தலை வலியை உண்டாக்குகிறது. பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு எனப்படும் PTSD மைக்ரைன் தலை வலியுடன் சம்பந்தப்பட்டது. பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், மாதவிடாய் இறுதி நாட்களுக்கு முந்தைய காலம், மாதவிடாய் இறுதிக் காலம் போன்ற நேரங்களிலும் இந்த தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு.
ஒற்றை தலை வலியை சமாளிக்கும் வழி முறைகள்
ஒருவருக்கு ஏற்படும் ஒற்றை தலைவலியின் தீவிரத்தை பொறுத்து அதற்கான சிகிச்சை எளிதாகவோ, கடினமாகவோ இருக்கும்.
- நல்ல ஆழ்ந்த உறக்கம்
- உங்கள் வாழ்க்கையில் தேவையில்லாத அனாவசியமான மன அழுத்தங்களை குறைக்கும் வழிகளை கையாளுதல்
- உங்கள் உடலில் போதுமான நீர் பெற அதிக நீர் அருந்துதல்
- உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முறையான உடற்பயிற்சி
- க்ளூடன் , மோனோசோடியம் குளூட்டமேட் உணவுகளை தவிர்த்தல்
- ஒரு நல்ல காப்பியுடன் ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டால் உங்கள் தலிவலி குறையவோ, குணமாகவோ கூடும்.
மேற்கூறிய வாழ்க்கை முறைகள் உங்களுக்கு மைக்ரைன் தலை வலியால் உண்டாகும் துன்பத்தை குறைக்க முடியவில்லை என்றால், மருத்துவரை அணுகவும். கடுமையான ஒற்றை தலைவலியின் தீவிரத்தை குறைக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் கண்டிப்பாக உதவும்.
மைக்ரைன் தலை வலி வருவதற்கான அறிகுறிகளை நீங்கள் உணரும் பொழுதே அதற்கான வலி நிவாரண மாத்திரைகளை உண்ண வேண்டும். அதனால் தலை வலி தீவிரமடையாமல் தடுக்கப் படுகிறது. ஒரு வேலை திடீரென உங்களுக்கு கடுமையான வலி ஏற்பட்டால் மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகள் பெரிதும் உதவுகின்றன. அவற்றில் சில:
- நாப்ரோக்சென்
- இப்யூபுரூஃபன்
- அசிடமினோஃபென்
Image Source: Pixabay

