Home / Travel Guide And News in Tamil / இந்தியாவில் கண்டிப்பாக பார்க்கவேண்டிய 5 கடற்கரைகள்
உங்கள் வழக்கமான தினசரி வாழ்க்கை முறை சலித்து விட்டதா? அடுத்த விடுமுறைக்கான இடத்தை தேர்வு செய்ய தொடங்கி விட்டீர்களா? மனதை கொள்ளை கொள்ளும் இந்தியாவின் சில அழகான கடற்கரைகளுக்கு போவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கடற்கரைகள் எப்பொழுதுமே அமைதியை தருபவை, நீங்கள் இயற்கையை ரசிப்பவராயின், கண்டிப்பாக இக்கடற்கரைகளை பார்க்கவேண்டும்.
Table of Contents
கேரள மாநிலம், திருவனந்தபுரத்திலுள்ள ஒரு அழகான கடற்கரை கோவளம். கலங்கரைவிளக்கமும், அமைதியான சுற்றுப்புறமும் நம்மை அங்கு வர தூண்டக்கூடியவை. சூரிய ஒளி குளியல், படகு சவாரி, மூலிகை மசாஜ் போன்றவைகளை அங்கு அனுபவிக்கலாம். மேலும் இந்த அழகான கடற்கரையில் மீன் பிடிக்கலாம், இஷ்டம் போல் ஷாப்பிங் செய்யலாம். சர்ஃபிங் செய்வதற்கு சிறந்த கடற்கரைகளில் ஒன்றான கோவளம், கலங்கரை விளக்கத்திற்கும் பெயர்போனது. அதன்மேல் ஏறி நின்று கோவளம் கடற்கரையின் முழு அழகையும் ரசித்தால் உங்கள் பயணம் முழு பலனை அடைந்து விடும்!
புகைப்படம் எடுப்பதை நீங்கள் விரும்புபவராயின், பாரடைஸ் கடற்கரை உங்களுக்கான இடம். இதன் அமைதியான அழகு, மென்மையான மணற்பரப்பு, திகைப்பூட்டும் காயல் எனப்படும் பாக்வாட்டர்ஸ், மனதை மயக்கும் காட்சியமைப்பு போன்றவை உங்களை ஈர்க்கக்கூடியவை. இந்த கடற்கரையை அடைய நீங்கள் 20-30 நிமிட படகு சவாரி செய்ய வேண்டும். பாண்டிச்சேரியுலுள்ள இந்த தனிமையான கடற்கரையின் புகழ்பெற்ற மீன்பிடித்தல் உங்களை மகிழ்விக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. கடற்கரையோரமாக காலாற நடந்து சென்று சூரிய அஸ்தமனத்தை ஆனந்தமாக கண்டு களிக்கலாம்.
சற்று தொலைதூர பயணத்தை நீங்கள் விரும்பினால், அந்தமான் ஹாவ்லாக் தீவில் உள்ள ராதாநகர் கடற்கரைக்கு செல்லலாம். கடலில் குளித்து, நீந்தி, சூரியனின் வெம்மையை அனுபவிக்க ஏற்ற இடம். இந்த கடற்கரை அதன் பிரதான இட அமைப்பிற்கும், இயற்கை அழகிற்கும் புகழ் பெற்றது. இங்கு நீச்சல் தவிர, வேறு நீர் விளையாட்டுகளுக்கு அனுமதியில்லையென்றாலும், இக்கடல் நீரின் பச்சையும் நீலமும் கலந்த டர்க்கைஸ் வண்ணம் அனைவரையும் கவர்ந்து இங்கு வரவழைக்கிறது. டைம் பத்திரிகை இந்த கடற்கரையை ஆசியாவின் சிறந்த கடற்கரை என்ற பட்டத்தை கொடுத்து இதை நாம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கடற்கரை என்கிறது.
இயற்கையை விரும்பி ரசிப்பவர்கள் கண்டிப்பாக கோவாவில் உள்ள இந்த பாலோலெம் கடற்கரையின் அழகில் மனதை பறிகொடுப்பர். இங்கு விதவிதமான மக்களை மூன்று வெவ்வேறு பகுதிகளில் காணலாம். இதன் தெற்கு பகுதி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நிறைந்து காணப்படும். வடக்கு பகுதியோ எந்த சலனமுமின்றி அமைதியாக இருக்கிறது. இந்த கடற்கரையின் நடு பகுதி தனி பயணிகள், குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் என நிறைந்து இருக்கிறது. கடற்கரையின் மணற்பரப்பில் இறங்கி நடக்க தொடங்கினால் ஏராளமான குடில்கள், படகுகள், மீன் வலைகள் போன்றவை நிறைந்து இருப்பதை காணலாம். மேலும் சுவாரஸ்யமான மீன் பிடித்தல், படகு சவாரி, ஷாப்பிங் போன்றவற்றிலும் ஈடுபடலாம்.
சென்னையிலுள்ள மெரீனா கடற்கரை உலகிலேயே இரண்டாவது பெரிய கடற்கரையாகும். இந்த கடற்கரை எப்பொழுதும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் ஒன்று. குடும்பமாகவும், நண்பர்களுடனும் அடிக்கடி இங்கு வருவது இந்நகர வாசிகளின் வாடிக்கை. இங்கு அதிகமாக ஏற்படும் கடல் கொந்தளிப்பால், குளிக்க அனுமதியில்லை. இங்கு அக்வாரியத்தில் நன்னீர் உயிரினங்களையும், பல தலைவர்களின் சிலைகளையும் காணலாம். விடியற்காலையில் இங்கு நடந்தால், இந்த கடற்கரையின் அழுகு நம்மை மிகவும் கவர்கிறது. மெரீனா கடற்கரையில் கிடைக்கும் தென்னிந்தியாவின் சுவைமிக்க சிற்றுண்டிகளை உண்ண மறவாதீர்கள்!
COMMENTS (0)