ஒவ்வொரு பெண்ணிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய 5 பாரம்பரியமிக்க புடவைகள்

Spread the love

நம் இந்திய நாடு பன்முகத்தன்மைக்கு மிகவும் பெயர் பெற்றது. அதை நம் வாழ்க்கை முறை, உடை, உணவு பழக்க வழக்கங்கள் அனைத்திலும் காணலாம். இந்தியாவின் பிரபலமான பெண்களுக்கான  உடை புடவை. திருமணமான பெண்கள் புடவை உடுத்துவது நம் நாட்டில் வெகு சகஜம். விழாக்கள், பண்டிகைகள், மத சடங்குகள் போன்ற பாரம்பரிய உடைகள் அணியப்படும் எந்த விசேஷமாக இருந்தாலும், நம் இந்திய பெண்களின் முதல் விருப்பம் புடவைதான். பாரம்பரிய தோற்றத்தை தருவது மட்டுமல்லாது, புடவை நவீன தோற்றத்தையும் அளிக்கிறது.

எப்படி இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும், அதற்கென்று தனித்துவமிக்க பாரம்பரிய உடைகள் உள்ளனவோ அதேபோல் ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கான பிரத்யேகமான புடவையை காணலாம். நம் மனதை கொள்ளைக் கொள்ளும் சில பாரம்பரிய புடவைகளைப் பற்றி இங்கு பார்ப்போம்:

 

1.பனாரஸ் புடவை:

வட இந்திய பெண்கள் விரும்பி அணியும் பிரபலமான ஒரு புடவை இந்த பனாரஸ் புடவை. உத்திரபிரதேசத்திலுள்ள புனித ஸ்தலமான வாரணாசியில் நெய்யப்படுகிறது. இதன் பண்டைய பெயர் பனாரஸ். இந்தபுடவையில் காணப்படும் வெள்ளி, தங்கம், மற்றும் ஜரிகை நூலால் செய்யப்பட்ட வேலைப்பாடுகள் மிக பிரசித்தம். சிறிது கனமாக இருக்கும் இந்த புடவையை தினசரி கட்டுவது கடினமென்றாலும், கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு கட்டிக்கொள்வதை நம் பெண்கள் மிகவும் விரும்புகின்றனர்.

 

2.காஞ்சிவரம் புடவை:

திறமைமிக்க நெசவாளர்களுக்கு பெயர் பெற்ற தமிழகத்தின் காஞ்சிபுர மாவட்டத்தின் சிறப்பு இந்த காஞ்சிவரம் பட்டு புடவைகள். கம்பீரம் மற்றும் நேர்த்தியான தோற்றத்தை அளிக்கும் இப்புடவைகளை தென்னிந்திய பெண்கள் கல்யாணம் போன்ற பெரும் விசேஷங்களுக்கு விரும்பி உடுத்துவது வழக்கம்.

 

3.பைத்தானி புடவைகள்:

மகாராஷ்ட்ர மாநிலத்தின் பிரபலமான பட்டு புடவையான இது, அங்கு ஔரங்காபாதிலுள்ள பைத்தான் என்னும் ஊரின் அடையாளம். பட்டு மற்றும் தங்க ஜரிகை நூலினால் நெய்யப்படும் இப்புடவையின் முந்தானையில் மயிலின் உருவங்கள் பெரும்பாலும் காணப்படுகிறது. அடர்ந்த நிறங்களில் பாரம்பரியமாக நெய்யப்படும் இப்புடவைகள், இப்பொழுது காலத்திற்கேற்றவாறு சிறு மாற்றங்களுடன் நவீன தோற்றத்தை தரும் வகையிலும் நெய்யப்படுகின்றன. மூக்குத்தியும், பாரம்பரிய நகைகளும் அணிவது  இப்புடவைக்கு மேலும் அழகும் சேர்க்கும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

 

4.பட்டோலா புடவைகள்:

குஜராத் மாநிலத்தின் மிக பிரபலமான பட்டோலா புடவைகள் மிகவும் திறமை வாய்ந்த நெசவாளர்களால் நெய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை மனதில் கொண்டு நான்கு வித்தியாசமான வடிவமைப்பில் இப்புடவைகள் நெய்யப்படுகின்றன. பொதுவாக இப்புடவைகளில் கிளி, யானை, மயில், பூக்கள் போன்றவற்றின் உருவங்கள் பதிக்கப்படுகின்றன. மகாராஷ்ட்ரிய பிராமின்கள் இப்புடவையை கல்யாண சடங்கின் போது உடுத்துகின்றனர். வெவ்வேறு விதமாக இப்புடவையை உடுத்தி, ஒவ்வொரு முறை உடுத்தும் போதும் ஒரு புது தோற்றத்தை பெற்று மகிழலாம். வெள்ளி நகைகள் இப்புடவைக்கு சரியான பொருத்தமாக இருக்கும்.

 

5.சந்தேரி புடவைகள்:

பட்டு அல்லது பருத்தி நூலால் நெய்யப்படும் சந்தேரி புடவைகள் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தது. பாரம்பரியமாக காசு, மயில், பூக்கள் போன்றவை இப்புடவையில் பதிக்கப்பட்டன. தற்பொழுது , இக்காலத்திற்கேற்பவும், உடுத்துபவரின் விருப்பத்திற்கேற்பவும் நெய்யப்படுகிறது. நேர்த்தியான, எளிமையான தோற்றத்தை அளிக்கும்.இப்புடவையை எந்த சமயத்திலும் உடுத்தலாம். இப்புடவை உடுத்துவதற்கு மிகவும் வசதியானது மற்றும் சுலபமானது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன