Search

Home / Uncategorized / நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய வயிற்று புண் பற்றிய கரணங்கள் மற்றும் அறிகுறிகள்

நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய வயிற்று புண் பற்றிய கரணங்கள் மற்றும் அறிகுறிகள்

Subhashni Venkatesh | செப்டம்பர் 11, 2018

வயிற்று புண் என்றால் என்ன?

வயிற்று புண் அல்லது குடல் புண் என்று அறியப்படும் அல்சர் இரைப்பையின்  உட்புற சுவரில் உண்டாகும் புண். நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்வதற்காக, வயிறு ஒரு வகையான சக்தி வாய்ந்த அமிலத்தை சுரக்கிறது. அந்த அமிலம் திசுக்களையும், வயிற்று சுவரையும் பாதிக்காமல் இருக்க, ஒரு தடித்த அடுக்கான சளி போன்ற திரவத்தை உற்பத்தி செய்கிறது. அந்த திரவம் விலகி நின்றாலோ, சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, அமிலமானது இரைப்பை திசுக்களை  சேதப்படுத்தி, புண்களை உண்டாக்குகிறது. அப்படி உண்டாகும் புண்கள் தான் அல்சர் / வயிற்று புண் / குடல் புண் எனப்படுகிறது.

காரணங்கள்

வெகு காலமாக, வயிற்று புண் உண்டாவதற்கான முக்கிய காரணம் அதிகப்படியான அமிலம் தான் என்று நம்பப்பட்டு வந்தது. அதைப்பற்றி மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பொழுது அதற்கான வேறு பல காரணங்களையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

 

1.ஹெலிகோபேக்டர் பைலோரி

நம் இரைப்பை திசுவில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்னும் பாக்டீரியா காணப்படுகிறது. சாதாரணமாக இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்கின்றனர். குடலில் அமைதியாக குடிக் கொண்டிருக்கும். ஆனால் சில சமயங்களில் இந்த பாக்டீரியா அதிகமான அமிலம் சுரக்க காரணமாகிறது. அதனால் இரைப்பை திசுக்கள் வீங்கி, சேதமடைந்து அல்சர் உண்டாகிறது.

 

2.வலி நிவாரண மாத்திரைகள் பரிந்துரைத்தல்

அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை மருந்துச் சீட்டு மூலம் எடுத்துக் கொள்ளுதல், நான்ஸ்டீராய்டல் எதிர்ப்பு அழற்சி மருந்துகள் (NSAID) எனப்படும் மருந்துகளை மருந்து கடைகளில் தானாகவே வாங்கி உட்கொள்ளுதல் போன்றவை வயிற்று/ குடல் புண்களை உண்டாக்குகிறது. இம்மருந்துகள் உள்ளே சென்று கிளர்ச்சியுற்று இரைப்பையின் திசுக்களை வீக்கமுறச் செய்து புண்களை ஏற்படுத்துகிறது.

 

3.மற்ற மருந்துகள்

வலி நிவாரணிகள் மற்ற மருந்துகளான ஆஸ்பிரின், ஸ்டீராய்டுகள், இரத்த உறைதலை தடுக்கும் மருந்துகள் போன்றவற்றுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் பொழுது அல்சர் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

அளவிற்கு அதிகமான அமிலத்தன்மை , ஸோலிங்கர்-எலிசன் சிண்ட்ரோம் என்னும் நோய் போன்றவை அதிக அமிலத்தை உண்டாகுவதால் வயிற்று புண் / அல்சர் ஏற்பட மற்ற காரணங்களாக கருதப் படுகின்றன.

 

அபாய காரணிகள்

வயிற்று புண் ஏற்படக் கூடிய அபாயம் பெரும்பாலும் முதியோர்களுக்குத்தான் அதிகம். ஏனெனில் அவர்கள் தான் வலி நிவாரண மாத்திரைகளை வெகுநாட்களாக உபயோகிப்பவர்கள். இளைய வயதினரும் அடிக்கடி வலி நிவாரணிகள் உபயோகித்தால் வயிற்று புண் நோயால் தாக்கப்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

மற்ற காரணிகள்:

  • மரபியல்
  • புகப்பிடித்தல்
  • அதிகமான மசாலா சேர்த்த உணவு
  • சமாளிக்கப்படாத மன அழுத்தம்
  • அடிக்கடி ஸ்டீராய்டு உபயோகித்தல்
  • அதிகமான மது அருந்துதல்
  • உடலில் அதிகப்படியான கால்ஷியம் உற்பத்தி

 

பொதுவாக இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுவதில்லை என்றாலும், பெற்றோர் புகப்பிடிப்பவராயின், தாக்க வாய்ப்பு இருக்கிறது. மேற்கூறிய காரணிகளால் அல்சர் உண்டாவதில்லை, ஆனால் அவை அதற்கான அறிகுறிகளை மேலும் மோசமடைய செய்கின்றன. வயிற்று புண் எளிதில் குணமாகாமல் இருக்க முக்கிய காரணம் புகைப்பிடித்தல் ஆகும்.

 

அறிகுறிகள்

வயிற்று புண் என்னும் அல்சரால் அவதிப்படும் மக்களில் ஏறத்தாழ 75 சதவிகித மக்களுக்கு அதற்கான எந்த அறிகுறியும் தென்படுவதில்லை. ஆனால் மற்ற சிலருக்கு அறிகுறிகள் உண்டாவதுண்டு. அவை

  • வயிற்றில் எரிச்சல். இதற்கு முக்கிய காரணம் அமிலம். மதிய உணவிற்கும், இரவு உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் உங்கள் வயிறு காலியாக இருக்கும் சமயம் அதிக எரிச்சல் உணர்வு ஏற்படும்.
  • எப்பொழுதும் வயிறு நிறைந்து இருப்பது போன்ற உணர்வு.
  • வயிற்று  உப்பிசம்
  • ஏப்பம்
  • நெஞ்செரிச்சல்
  • வயிற்று குமட்டல்
  • அஜீரணம்
  • எண்ணெய் அதிகமுள்ள பண்டங்கள்  ஒவ்வாமை

ஒருவேளை வயிற்று புண்ணிற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனில், நிலைமை இன்னும் மோசமாகி விடும். அச்சமயங்களில் கீழே கூறப்பட்டுள்ள அறிகுறிகள் ஏற்படும்:

  • நெஞ்சு வலி
  • மலத்தில் இரத்தம் வெளியேறுதல்
  • பசியின்மை
  • மூச்சு விடுதலில் சிரமம்
  • காரணமில்லாமல் எடை குறைதல்
  • கறுப்பு அல்லது சிவப்பு நிற இரத்த வாந்தி
  • அதிகரித்துக் கொண்டே போகும் வயிற்று வலி
  • தலை சுற்றல், மயக்கம்

சில சமயங்களில் சிறிய அளவில் உண்டாகும் வயிற்று அல்லது குடல் புண்கள் எந்த அறிகுறிகளையும் காண்பிப்பது இல்லை. இரத்த போக்கு வரும் நிலையில் தான் வெளியே தெரிய வருகிறது. சில அல்சர் / வயிற்று புண் வகைகள் தீவிரமாக தாக்கி இரைப்பை திசுக்களில் ஓட்டை விழும் அளவுக்கு சேதப்படுத்தி விடும்.

வயிற்று புண்கள்  எளிதில் குணமடையக் கூடியவை தான் என்றாலும், அவற்றை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால் ஆபத்தான, சிக்கலான நிலைக்கு இட்டுச் செல்லும்.வயிற்றின் உள்ளே இரத்தப் போக்கு ஏற்பட்டு அதிகப்படியான இரத்த இழப்பு, துளை ஏற்படுதல், தீவிர தொற்று, உணவு செல்லும் வழியான செரிமான குழாயில் அடைப்பு போன்றவை ஏற்படும்.

Image sources: Wiki commons, Pxhere and Pixabay

Subhashni Venkatesh

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன