பருவமழைக் காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது எப்படி?

Spread the love

மழை நீரில் குளித்து புதியதாய் தோற்றமளிக்கும் பச்சை மரங்கள், சாலைகள், சுத்தமான , வருடும் காற்று இவற்றுடன் கூடிய பருவமழைகாலம் நமக்கு கோடை வெப்பத்திற்கு பின் வரும் ஒரு நிவாரண காலமாகும். துரதிஷ்டவசமாக இக்காலம் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கும் அடைக்கலம் தந்து நம்மை நோய் தொற்றுகளுக்கு இரையாக்கும் காலமாகவும் இருக்கிறது.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் மூலம், பருவமழைக்காலத்தை பாதுகாப்புடன் அனுபவியுங்கள்:

 

1.ஈரமின்மை

மழையில் நனைந்து கொண்டு நடப்பது, அந்த நேரத்தில் மகிழ்ச்சியாகவும், சுகமாகவும் இருந்தாலும், மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வெறும் காலுடனோ அல்லது காலணிகளுடனோ தேங்கிய , அழுக்கு தண்ணீரில் நடந்தால், நோய் தொற்று ஏற்படும். மழை நீரில் நடக்க நேர்ந்தால், உடனே பாதங்களை ஆன்டி-பாக்டீரியா சோப்பு கொண்டு கழுவி சுத்தமான துணியால் துடைக்கவும். மேலும் முழங்கால் மூட்டுகள், அக்குள்கள், கால் , கை விரல் இடுக்குகளில் அப்சார்பன்ட் டால்க் / பௌடர் போடலாம். குளிரூட்டப்பட்ட அறைகளில் ஈர உடைகளை அணிந்திருத்தல் கூடாது. அதனால் மார்பில் சளி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதிகமாக வியர்க்கும் உடல்வாகு கொண்டவராயின் அடிக்கடி உள்ளாடைகளை மாற்றுதல் அவசியம்.

 

2.நோய் எதிர்ப்புதன்மையை அதிகரித்தல்

மழைக்காலங்களில் நோய் கிருமிகள் பெருகும் நேரமாதலால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரித்துக் கொள்ள வேண்டும். வைட்டமின்c அதிகம் உள்ள ப்ரொகொலி, முளை கட்டிய பயறுகள், சிட்ரஸ் பழங்கள், பச்சை கீரைகள், காலிப்ளவர் போன்றவற்றில் செய்த  உணவுகளை உண்ண வேண்டும். ஆனால் திறந்த வெளி கடைகளில் விற்கப்படும் உணவை வாங்கி உண்ணாமல் , வீட்டில் உப்பு நீரில் கழுவி பாக்டிரீயாக்களை அகற்றி சமைத்து உண்ண வேண்டும்.

 

3.அதிக நீர் அருந்த வேண்டும்

இப்பருவ காலத்தில் அதிகமான புழுக்கத்தால், அதிக அளவில் நம் உடலில் உள்ள நீர் வியர்வை மூலம் வெளியேறுகிறது. அதிகமான நீர் அருந்துவதன் மூலம் உடல் வறட்சியின் அறிகுறிகளான தலை வலி, சக்தியின்மை, ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு, போன்றவைகளை சமாளிக்கலாம். உப்பு போட்ட எலுமிச்சை சாறு, இளநீர் போன்றவை நம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவுகின்றன. காஃபினேடட், கார்பனேடட் அல்லது மது பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும். அவை சிறுநீர் வெளியேறுவதை அதிகப்படுத்தும் ஊக்கிகளாக செயல்படுகின்றன.  நீரினால் ஏற்படும் நோய்கள் இக்காலங்களில் அதிகமாக பரவுமென்பதால் சுத்தமான, காய்ச்சிய, வடிகட்டிய நீரை அருந்தவும்.

 

4.கொசு விரட்டிகளை உபயோகப்படுத்தவும்

பருவ மழை காலங்களில் கொசுக்களின் பெருக்கம் அதிகமாக இருக்கும். கொசுக்களை விரட்டும் களிம்பு அல்லது சாதனங்களை தாரளமாக உபயோகப்படுத்துங்கள். தளர்வான, நீள, முழு கை, முழு கால் உடைகளை அணியுங்கள். இறுக்கமான, மெல்லிய உடைகளை அணிந்தால் கண்டிப்பாக கொசுக்கடிக்கு உள்ளாவீர்கள். அதனால் சற்று தளரவான உடைகளை அணிவதன் மூலம் டெங்கு சிக்கன்குனியா போன்ற பரவும்  நோய்கள் தாக்கும் அபாயத்திலிருந்து சற்று விலகி இருக்கலாம்.

 

5.சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருங்கள்

தூய்மையான சுற்றுபுறத்தை மழைக்காலத்தில் பராமரிப்பது கடினமாகும். வடிகால், வாட்டர் கூலர் போன்றவைகளுக்கு அருகில்  நீர் கசிவு அல்லது தண்ணீர் தேங்குவதோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

தேங்கிய நீர் ஈரமான சுவர், தரை போன்றவற்றில் கொசுக்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. மேலும் ஈரமான தரை மற்றும் சுவர்களில் பூஞ்சை வளரத் தொடங்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக விழிப்புணர்வுடன் இருத்தல் அவசியம். நம் உடலில் நோய் தொற்று ஏற்பட்டால் அதற்கான முதல் அறிகுறி காய்ச்சல் ஆகும். கை, கால், உடல் வலி , வாந்தி இருந்தாலோ , வெள்ளை நிறத்தில் மலம் கழித்தாலோ, வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் தோல் இருந்தாலோ உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன